சிவகிரி அருகே உடல்நல குறைவால் எழமுடியாமல் தவித்த யானை குணமாகி காட்டுக்குள் சென்றது
சிவகிரி: சிவகிரி அருகே உடல்நல குறைவால் எழ முடியாமல் இருந்த யானைக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில் யானை குணமாகி வனப்பகுதிக்குள் சென்றது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே சின்ன ஆவுடைபேரி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் யானை ஒன்று பெரிய பனை மரத்தை வேரோடு சாய்த்தது, அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு பெரிய ஆவுடையபேரி பகுதியை ஒட்டி உள்ள குசவல்காடு பகுதியில் எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தது.
இதுபற்றி பொதுமக்கள் மூலம் தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், ரேஞ்சர் கதிரவன், வனவர் பிரகாஷ், கால்நடை மருத்துவ நிபுணர் சாந்தகுமார், வன காவலர்கள் மாரியப்பன், ஆனந்த் உள்ளிட்டோர் அங்கு சென்று யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை தொடங்கினர். இருப்பினும் யானையால் எழுந்து நிற்க முடியாததால் பெரிய கிரேன் மூலம் யானையை தூக்கி நிறுத்தி சிகிச்சை அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின், 3வது நாளான இன்று யானை குணமாகி எழுந்து நின்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.