தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வருகை
கரூர்: தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், இன்று (22ம்தேதி) கரூர் திரும்புவதாக கூறப்படுவதால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதற்காக கடந்த 17ம்தேதி கரூர் வந்த குழுவினரிடம் எஸ்ஐடி குழுவினர் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தனர். கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் முகாமிட்டு இருந்த சிபிஐ குழுவினர், 18ம்தேதி வேலுச்சாமிபுரத்தை 5 நிமிடம் காருக்குள் இருந்தபடியே பார்வையிட்டதோடு அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரிக்காமல் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில் தீபாவளியை கொண்டாட சிபிஐ அதிகாரிகள் கடந்த 19ம் தேதி அவர்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் இன்று (22ம்தேதி) கரூர் திரும்புவதாக கூறப்படுகிறது. கரூர் திரும்பியதும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், படுகாயம் அடைந்தவர்களை பயணியர் விடுதிக்கு நேரில் வரவழைத்து சிபிஐ குழுவினர் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.