மாமனார் வீட்டில் அளித்த விருந்தில் இறால் சாப்பிட்ட புதுமாப்பிள்ளை சாவு: திருமணமான 17 நாளில் சோகம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இறால் பிரை சாப்பிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். திருமணமான 17 நாளில் நடந்த சோக சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சீனிவாசன் நகர் கனரா வங்கி காலனியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சீவ்ராஜ்(28). திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த விஜயமூர்த்தி என்பவரின் மகளுக்கும் கடந்த 11ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்கு பின்பு திருச்சியில் வசித்து வந்த சஞ்சீவ்ராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாமனார் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு மாமனார் வீட்டில் ஏற்பாடு செய்த விருந்தை சாப்பிட்டுள்ளார். அப்போது இறால் சாப்பிட்ட சஞ்சீவ்ராஜூக்கு சிறிது நேரத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து சஞ்சீவ்ராஜின் தாய் கல்யாணி, வளவனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.