அறிமுகம் செய்யப்பட்ட 15 நாட்களில் 1 லட்சம் டிக்கெட்டுகள் என்ற மைல்கல்லை கடந்தது CHENNAI ONE செயலி
சென்னை: சென்னையில் MTC பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என அனைத்திற்கும் டிக்கெட் பெறுவதற்கான ஒற்றைச் செயலியாக CHENNAI ONE செயலி அறிமுகம் செய்யப்பட்ட 15 நாட்களில் பயனாளர்கள் 1 லட்சம் டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று' செல்போன் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த செயலி பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் டாக்சி, ஆட்டோக்களை ஒரே ‘கியூ.ஆர்.’ பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், யு.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சென்னை ஒன்று' செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி, செப்., 22ல் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில், 2 லட்சம் பேர் இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதி விறக்கம் செய்தனர். நாளொன்றுக்கு, 2,000 முதல், 3,000 பேர் டிக்கெட் எடுத்து பயணங்களை மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது. கடந்த 15 நாட்களில், இந்த செயலி வாயிலாக, 1 லட்சம் பேர் டிக்கெட் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.