நிதி நிறுவனம் மோசடி வழக்கில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!!
சென்னை : நியோமெக்ஸ் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நியோமேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக வாக்குறுதி தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களைச் சேர்த்தது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி ஒரு லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்து, உயர்நீதிமன்ற உத்தரவுகளை தகுந்த நேரத்தில் அமல்படுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டார். 14 மாவட்டங்களில் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணை முடிவுற்றதாக குறிப்பிட்ட அவர், மேலும் 2 மாவட்டங்களில் சொத்துக்களை ஆய்வு செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, குறுகிய காலத்தில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை துரித நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.