தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: திரும்ப பெற லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்
சேலம்: இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 855 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 65 இடங்களில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணை ஒப்பந்தப்படி, 1992ல் போடப்பட்ட தேசிய ெநடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. சுங்கக்கட்டண உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
* விக்கிரவாண்டியில் அதிகரிப்பு விவரம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டோல்கேட்டில் சுங்க கட்டண விவரம்: கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றிக்கு மாற்றமின்றி ஒரு வழி கட்டணம் ரூ.105, பல முறை பயணிக்க புதிய கட்டணம் ரூ.160 (பழைய கட்டணம் ரூ.155), மாதாந்திர கட்டணம் ரூ.3,170 (ரூ.3,100) இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.185 (ரூ.180), பல முறை பயணிக்க ரூ.275 (ரூ.270), மாதாந்திர கட்டணம் ரூ.5,545 (ரூ.5,420), டிரக், பேருந்து ஒரு வழி கட்டணம் ரூ.370(ரூ.360), பல முறை பயணிக்க ரூ.555(ரூ.540), பல அச்சு வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.595 (ரூ.580), பல முறை பயணிக்க ரூ.890 (ரூ.870), மாதாந்திர கட்டணம் ரூ.17,820 (ரூ.17,425). இவ்வாறு ரூ.5 முதல் ரூ.70 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருகிறது.