தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதிநிலை நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதா 22.2.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல், பல்வேறு காரணங்களை கூறி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா, மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
2வது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோன்று, முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் மசோதா சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோன்று சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா மற்றும் நிதி சார்ந்த மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.