தமிழகத்தின் முன்னணி ஓட்ட வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்ட தனலட்சுமி சஸ்பெண்ட்: 8 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம்
சென்னை: தமிழகத்தை சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை தனலட்சுமி (27). இவர், கடந்த 2022ல் பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க இருந்த நிலையில், ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி ஆனதால் 3 ஆண்டு போட்டிகளில் ஆட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின், இந்தாண்டு ஆகஸ்டில் சென்னையில் நடந்த தேசிய, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற தனலட்சுமி, 100 மீட்டர் (11.36 விநாடி), 200 மீட்டர் (23.53 விநாடி) ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் தங்கம் வென்றார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சங்ரூரில், இந்திய ஓபன் தடகளப் போட்டிகளில் பங்கேற்க சென்ற தனலட்சுமி, ட்ரோஸ்டனோலோன் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் ஊக்க மருந்தை அறிந்தே பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டால், 8 ஆண்டு ஓட்டப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவார் எனத் தெரிகிறது.