தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் நடத்தும் எஸ்ஐஆர் பணி இன்று முதல் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு; 42,000 பேர் வராவிட்டால் பணிகள் முற்றிலும் பாதிக்கும்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை இன்று முதல் முழுவதுமாக புறக்கணிக்கப்போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் திடீரென அறிவித்துள்ளனர். சுமார் 42 ஆயிரம் எஸ்ஐஆர் பணியை புறக்கணித்தால் எஸ்ஐஆர் பணிகள் முழுவதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்காளர் அட்டையை திரும்ப புதுப்பித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதற்காக தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்தில் சுமார் 77 ஆயிரம் அரசு பணியாளர்களை பிஎல்ஓக்களாக (வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்) நியமித்துள்ளது. இவர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்க வேண்டும். பின்னர் அந்த விண்ணப்ப படிவங்களை திரும்ப பெற வேண்டும். இப்படி ஒவ்வொரு வாக்காளர் நிலை அலுவலர்களும் ஒருவர் வீட்டுக்கு 3 முறை செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியில் பல பிரச்னைகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சந்தித்து வருகிறார்கள்.

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள விண்ணப்பங்கள் குறித்து போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அரசு ஊழியர்களிடம் உள்ளது. மேலும், விண்ணப்பத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்று பொதுமக்களுக்கும் தெரியவில்லை. இதனால் குழப்பநிலை உருவாகியுள்ளது. அரசியல் கட்சிகளும், இதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் எஸ்ஐஆர் பணியில் ஈடுபடும் தமிழக அரசின் வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 42 ஆயிரம் இன்று முதல் இந்த பணியில் ஈடுபட மாட்டோம் என்று புறக்கணித்து உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதன்படி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாநில தலைவர் எம்.பி.முருகையன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் குமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பூபதி, தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், தமிழ்நாடு வட்டாட்சியர் கிராம ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி ஆகிய ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முடிவுகள் வருமாறு: அதீதமான பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக புறக்கணிப்பு முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் (எஸ்ஐஆர்) உரிய திட்டமிடலின்றியும், பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஏதும் வழங்காமல் அவசரகதியில் பணிகளை மேற்கொள்ள நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள், மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது. இதை களைந்திட வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்பாகவும் பணி நெருக்கடிகள் அதிகரிப்பதையும், சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை வதைப்பதை உடன் கைவிட வலியுறுத்தி, இரண்டு கட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதென வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

அதன்படி,

* 17ம் தேதி (நேற்று) மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ‘பெருந்திரள் முறையீடு’ செய்து மாவட்ட, வட்ட தலைநகரில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

* இன்று (18ம் தேதி) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான அனைத்தையும் முழுவதுமாக செய்வது, படிவங்கள் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல், எஸ்ஐஆர் ஆய்வு கூட்டங்கள் என வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து பணிகளையும் முற்றாக புறக்கணிக்கப்படும். இந்த போராட்டத்தில் அனைத்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர் முதல் ஆய்வாளர் வரை, அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை என அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபட உள்ளனர். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி மேற்கொள்ளும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நகராட்சி/மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத்து துறை அலுவலர் சங்கங்களையும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த கூட்டத்தின் மூலம் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு சில கோரிக்கைகள் வைக்கிறோம்.

1) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முழுமையாக பிழைகள் இன்றி மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் நிலைகளில் போதிய தன் ஆர்வலர்கள், அரசு பணியாளர்களை உடன் நியமனம் செய்ய வேண்டும்.

3) மாவட்ட ஆட்சியர்கள் ‘ஆய்வு கூட்டம்’ என்ற பெயரில் நள்ளிரவு வரை கூட்டங்கள் நடத்துவதையும், தினமும் காணொலி வாயிலாக மூன்று கூட்டங்கள் நடத்தி துன்புறுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும். அரசு விடுமுறை தினங்களில் இப்பணிகளை மேற்கொள்ள நிர்பந்தம் செய்வதை முற்றாக தவிர்த்திட வேண்டும்.

4) கடுமையான இப்பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும், கூடுதலான பணிப்பளுவை கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை ‘மதிப்பூதியமாக’ வழங்கிட வேண்டும். தமிழக தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு, சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

* தமிழக அரசின் வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 42 ஆயிரம் பேர் இன்று முதல் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட மாட்டோம் என்று புறக்கணித்து உள்ளனர்.

* அதீதமான பணி நெருக் கடிகளை களைந்திட வலியுறுத்தி இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளனர்.

* இதனால் படிவங்கள் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல், எஸ்ஐஆர் ஆய்வு கூட்டங்கள் என வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து பணிகளும் முற்றாக புறக்கணிக்கப்படும்.

* இன்று பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது; அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை

பழைய ஓய்வூதியத்தை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர். அதேபோன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) பணியை இன்று முதல் புறக்கணிக்கபோவதாக வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று திடீர் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் தலைமை செயலாளர் முருகானந்தம் அனைத்து துறை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை நேற்று அனுப்பியுள்ளார்.

சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள ஒருநாள் வேலைநிறுத்தம் குறித்து, தமிழ்நாடு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. வேலைநிறுத்த நாளில் பணிக்கு வராதவர்களின் வருகைப்பதிவில் அனுமதியில்லாத விடுப்பு எனக் கருதப்படும். வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது கொள்கை அமல்படுத்தப்படும். பகுதி நேரம், தினசரி கூலி, தொகை ஊதிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படலாம். வேலைநிறுத்த நாளில் சாதாரண அல்லது பிற வகை விடுப்புகள் வழங்கப்படாது.

மருத்துவ விடுப்பு மட்டும் பரிசீலிக்கப்படும். அதேபோல் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களின் வருகை விவரங்களை காலை 10.15 மணிக்குள் அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். செயல்துறைகள் 11 மணிக்குள் ஒருங்கிணைந்த வருகை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வேலைநிறுத்தம், போராட்டம் உள்ளிட்ட எந்த செயலில் ஈடுபட்டாலும், நடத்தை விதி மீறல் எனக் கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement