14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கை அடைந்தது தமிழக பொருளாதார வளர்ச்சி அபாரம்: கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதமாக அதிகரிப்பு, கலைஞர் ஆட்சியின் சாதனையை எட்டினார் மு.க.ஸ்டாலின்
சென்னை: அதிமுக ஆட்சியில் கடும் பொருளாதார சரிவை சந்தித்த நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு 11.19 என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன்படி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கலைஞர் ஆட்சியின் சாதனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கீழ், தமிழ்நாடு பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டு, ‘திராவிட மாடல்’ என்ற தங்கள் நிர்வாக கொள்கையை முன்னிறுத்தி வருகிறது.
குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இலவச பேருந்து பயணம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என மிக முக்கியமான சமூக நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவை காரணமாகும். அந்த வகையில் 2024-25 நிதியாண்டில், தமிழ்நாடு 11.19% என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்து இருப்பதாவது: 2024-25ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் 11.19% ஆக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட வளர்ச்சியை விட இது கிட்டத்தட்ட 2.2% அதிகமாகும். இதன் மூலம், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியை பெற்று நாட்டிலேயே முதலிடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. 2025-26ம் ஆண்டில் இது 12 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-25ம் ஆண்டில் ரூ.17 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24 ஆண்டை விட கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி அதிகமாகும். தனி நபர் வருமானத்தை பொறுத்தவரை தெலங்கானா, கர்நாடகாவை தொடர்ந்து 3வது இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய், சராசரியாக ரூ.3 லட்சத்து 61 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2010-11ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு அரசின் வளர்ச்சி 13.12 சதவீதம் என்ற உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறியுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் 2010-11ம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது பொருளாதார வளர்ச்சி 13.12 சதவீதமாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தமிழகத்தை அதிமுக ஆண்டது. அப்போது முதல் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி காலத்தில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லை. அதாவது கலைஞர் ஆட்சியில் இருந்த பொருளாதார வளர்ச்சியைகூட தக்க வைக்க முடியவில்லை. அதற்கும் குறைவாகத்தான் இருந்ததுதான் குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டு அதிமுக ஆட்சிக்கு பிறகு மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மீண்டும் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ந்துள்ளது. இதற்கு காரணம், முதல்வர் தலைமையிலான திட்டங்கள் மற்றும் நிர்வாகம்தான். மற்ற மாநிலங்களை விட அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில், இந்தியாவிலேயே இந்த இரட்டை இலக்க வளர்ச்சி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:
இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டி காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா... அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11ம் ஆண்டில்.
அப்போது கலைஞர் ஆட்சி. இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி. இரண்டுமே கழக ஆட்சி. 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது. “இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?” என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666). இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பெருமிதம் தெரிவித்துள்ள தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான பெரும் வளர்ச்சி, அற்புதமான செய்தி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
* நாட்டிலேயே முதலிடம்
ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே அபார பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 2024-25ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் 11.19% ஆக உயர்ந்துள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியை பெற்று நாட்டிலேயே முதலிடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. 2025-26ம் ஆண்டில் இது 12 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
* ஆட்சிக்கு வந்த உடனேயே இரட்டை இலக்க வளர்ச்சியை அதலபாதாளத்துக்கு தள்ளிய அதிமுக
தமிழகத்தில் கடந்த 2010-11 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 13.12 சதவீதமாக இருந்தது. பொருளாதாரம் இரட்டை இலக்கை எட்டி கலைஞர் ஆட்சியில் சாதனை படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. அப்போது 2011-12 நிதியாண்டில் தமிழக பொருளாதாரம் ஏறக்குறைய பாதியாக அதாவது 7.4 சதவீதத்தை அடைந்தது. அதற்கு அடுத்த ஆண்டுகளிலும் 5.37%, 4.92%, 3.25 % என படு மோசமாக சரிவை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
* திமுக ஆட்சியின்போதெல்லாம் இரட்டை இலக்க வளர்ச்சி
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.
கடந்த 2006-07 நிதியாண்டில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 15.21 சதவீதம் என்ற அபார வளர்ச்சியை எட்டியிருந்தது.
இதுபோல் கலைஞர் ஆட்சியிலேயே தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் அதாவது 2009-10ம் ஆண்டில் 10.83 சதவீதம் மற்றும் 2010-11 நிதியாண்டில் 13.12 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தொழில்துறையில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகள் உருவானதன் காரணமாக 11.19 சதவீதம் என இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
* வளர்ச்சிக்கு காரணங்கள் என்ன?
தொழிற்துறை வளர்ச்சி, சேவைத் துறை வளர்ச்சி, வியாபாரம், ஏற்றுமதி, முதலீடு ஆகியவற்றில் முன்னேற்றம்
* எதிர்கால இலக்கு
2031-32 ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம்1 டிரில்லியன் ஆக வளர வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு இலக்கு.
* 2025-26க்கான எதிர்பார்ப்பு
எல்லா துறைகளும் அரை சதவீதம் கூட வளர்ந்தால், 12% வளர்ச்சி கிடைக்கும் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.
* நிதி நிலைமையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
*வளர்ச்சி அதிகமாக இருப்பதால்
* நாட்டுக்கடன் விகிதம் குறையும்
* வருவாய் பற்றாக்குறை குறையும்
* நிதி பற்றாக்குறை குறையும்