தமிழகத்தில் முதன்முறையாக நீரிழிவு நோய்க்கு சிகிச்சை வழங்க சிறப்பு பராமரிப்பு மையம்: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் தொடக்கம்
இதுதொடர்பாக நீரிழிவு நோய் மையத்தின் தலைமைப் பொறுப்பு மருத்துவர் ஸ்ரீதேவி கூறியதாவது: வகை ஒன்று நீரிழிவு நோய்க்கு (டைப் 1) சிறப்பு பராமரிப்பு மையம் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. பிறந்த குழந்தை முதல் 12 வயது குழந்தை வரை இந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.
இந்நிலையில், வகை ஒன்று நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்குவதற்கு உயர்ரக பேனா இன்சுலின், குளுக்கோமீட்டர் கருவி, பரிசோதனை தாள், பேனா ஊசிகள், உடல் நலம் பெற அறிவுரைகள், பின்விளைவுகனை கண்டறிய பரிசோதனைகள் ஆகியவை புதிதாக திறக்கப்பட்ட மையத்தில் வழங்கப்படும்.
ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யும் குருவிகள் மற்றும் கண் பரிசோதனை செய்யும் ரெடினல் கேமரா கருவி ஆகியவை இந்த மையத்தில் உள்ளன. இந்த மையம் தமிழகத்தில் முதன்முறையாக இந்த மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மையங்கள் வரும் மாதங்களில் தஞ்சாவூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.