தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டெல்லி பயணம்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை (இன்று) காலை, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் கலந்துகொள்ள செல்கிறேன். அவசரகதியில் எஸ்ஐஆர் வேண்டாம். சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு, வசதி வாய்ப்புக்கு தகுந்தாற்போல், எஸ்ஐஆர் நடத்தலாம். பிஎல்ஓ அதிகாரிகள் பலருக்கு, எஸ்ஐஆர் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பது தெரியவில்லை. மக்களை எளிமையாகவும், மக்களை மகிழ்ச்சியாக வைப்பதும் தான் அரசு.
எளிமையாக நடத்தும் பணியை போய், சங்கடம் கொடுத்தால், மன உளைச்சலை கொடுத்தால், மக்கள் என்ன செய்வார்கள். மக்களுக்காக தான் ஆட்சி, மக்களுக்காக தான் தேர்தல் ஆணையம். எனவேதான் தள்ளி வையுங்கள் என்று கூறுகிறோம். கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதை எடுத்து விடுங்கள். முதலமைச்சர் தொகுதியாக இருந்தால் கூட, அவருக்கு இந்த தகவல் தெரிந்தால் போலி வாக்காளர்களை உடனடியாக எடுத்து விடுங்கள் என்று தான் கூறுவார். ஏனென்றால் அவர் ஒரு ஜனநாயக வாதி. ஜனநாயகத்தை தூக்கி நிறுத்துபவர். எனவே போலி வாக்காளர்களை எடுக்கும்படி தான் அவர் கூறுவார். இவ்வாறு அவர் கூறினார்.