தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை சென்னையை நெருங்கும் டிட்வா புயல்: எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு
சென்னை: இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.
இலங்கை அருகே டிட்வா புயல் உருவாகியுள்ளதை அடுத்து இலங்கையில் கடும் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அங்கு மழை நீடித்து வருகிறது. தரைப்பகுதியில் இருந்து டிட்வா புயல் கடல் பகுதிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. வெப்ப நிலையை பொருத்தவரையில் சென்னையில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி, சேலம், காரைக்கால் பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கோவை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டு டிட்வா புயல் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று, இலங்கை திரிகோணமலையில் இருந்து தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், மட்டக்களப்பு பகுதியில் இருந்து வட மேற்கே 100 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு- தென்கிழக்கு 300 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு- தென்கிழக்கே 430 கிமீ தொலைவிலும் சென்னையில் இருந்து 500கிமீ தொலைவில் நிலை கொண்டது. தற்போது இந்த புயல் மணிக்கு 3 கிமீ முதல் 5 கிமீ வேகத்தில் நகர்கிறது.
இது மேலும் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையில் கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை கடந்து வருகிறது. மெதுவாக நகரும் தன்மை கொண்டதால், நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் நகர்வின் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த காற்று மணிக்கு 60 கிமீ வேகம் முதல் 70 கிமீ வேகத்தில் வீசியது. மேலும் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக் காற்று 60 கிமீ வேகத்தில் வீசியது. மழையை பொருத்தவரையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. அதனால் அங்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த தரைக்காற்று மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசும். அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். 30ம் தேதியில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். சென்னை காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும்.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் டிட்வா புயலை எதிர்கொள்ள எல்லாவகையிலும் தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக நேற்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
* சென்னையில் இருந்து 500கிமீ தொலைவில் நிலை ெகாண்டிருந்த டிட்வா புயல், மணிக்கு 3 கிமீ முதல் 5 கிமீ வேகத்தில் நகர்கிறது.
* நாளை அதிகாலையில் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* நாளை திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.