தமிழக முதல்வரை அவதூறாக பேசிய விஜய் மீது வழக்குப்பதிய வேண்டும்: போலீசில் வக்கீல் புகார்
திருத்துறைப்பூண்டி: தமிழக முதல்வரை அவதூறாக பேசிய தவெக தலைவர் விஜய் மீதும், தொண்டரை தூக்கி வீசிய அவரது பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருத்துறைப்பூண்டி போலீசில் வக்கீல் ஒருவர் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் சிவசாகர்(41) இன்று புகார் மனு அளித்தார்.
அதில், மதுரை மாங்குளத்தில் கடந்த 21ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழக கட்சியின் 2வது மாநில மாநாடு நடந்ததை எனது செல்போனில் காணொலியில் பார்த்தேன். அந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, தமிழ்நாடு முதல்வரை விமர்சித்தும், அவதூறாகவும், கேலி செய்யும் விதமாகபேசியுள்ளார்.
தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்காகவே விஜய் இப்படி பேசியுள்ளார். மேலும் மாநாட்டில் விஜய் அருகே நெருங்கி வந்த அவரது தொண்டரை விஜயின் பாதுகாவலர்கள் மனிதநேயமற்ற முறையில் தூக்கி வீசியது மனிதநேயமற்ற செயலாகும். எனவே தமிழக முதல்வரை அவதூறாக பேசிய விஜய் மற்றும் நடைமேடையில் இருந்து தொண்டரை தூக்கி வீசிய விஜயின் பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.