எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 'தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சி பெறும் வகையில் முதலீடு ஈர்க்க சென்றுள்ளேன்.
ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று எனக்கு வரவேற்பளித்தனர். கொலோன் நகரில் வாணவேடிக்கையை ரசித்தபோது மனதெங்கும் தமிழ்நாட்டின் நினைவுகள் மத்தாப்பூகளாகச் சிதறின. ஜெர்மனியில் இருந்தபோது எனது செயலாளரிடம் தமிழ்நாட்டின் நிலவரங்கள் குறித்து கேட்டேன்.
சென்னையில் இரவில் கடுமையான மழை பெய்த விவரம் அறிந்ததும் மாநகராட்சி ஆணையருக்கு போனில் பேசினேன். 27 செ.மீ. மழை பெய்த நிலையிலும் எந்த பகுதிகளிலும் தண்ணீர் தேங்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.