தமிழகம் முழுவதும் 367 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வை 1 லட்சம் பேர் எழுதினர்: இரண்டாம் தாள் தேர்வை இன்று 3.73 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வில் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2ம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படாத நிலையில், 2025ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஆர்பி கடந்த ஆகஸ்ட் 11ல் வெளியிட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 4 லட்சத்து 80,808 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து நடப்பாண்டுக்கான டெட் தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது. துவக்க நாளில் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 367 மையங்களில் சுமார் 1 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.
முதல் தாள் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். கணிதம், தமிழ் ஆகிய வினாக்கள், பள்ளி புத்தகங்களில் இருந்து அதிகம் கேட்கப்பட்டதாகவும், உளவியல் கல்வி சார்ந்த வினாக்கள் மட்டும் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். அதனுடன் வினாத்தாளில், ‘தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டவர் யார்’,
‘தமிழ்நாடு எனும் சொல், முதலில் ஆளப்படும் இலக்கியம் எது’, ‘இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்பட்டவர் யார்’ போன்ற வினாக்கள் கேட்கப்பட்டன. தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1,241 மையங்களில், டெட் 2ம் தாள் தேர்வு இன்று (நவம்பர் 16) நடைபெறுகிறது. இந்த தேர்வில் 3.73 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.