தமிழ்நாட்டுக்கு எதிராக உள்ள பாஜவோடு சேர்ந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பு: சண்முகம் உறுதி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி: சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கருத்து கணிப்புகள் வருகிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி, கடந்த 2018ம் ஆண்டு முதல், கடந்த 8 ஆண்டுகளில் நடந்த 3 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் இருந்து, எந்த கட்சிகளும் விலகவில்லை. பிரம்மாவுக்கு 4 முகங்கள் இருப்பது போல், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒவ்வொரு பக்கமாக முகத்தை திருப்பி கொண்டு இருக்கிறார்கள்.
அதிமுகவை ஒருங்கிணைக்க, எடப்பாடி தரப்பில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, அதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாகத்தான் தெரிகிறது. அப்படியே அதிமுக ஒன்றுபட்டாலும், திமுக அணியை தோற்கடிப்பதற்கான வலிமை அவர்களிடம் இல்லை. ஏனென்றால் பாஜவுடன் இணைந்திருப்பதால், அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் சுருங்கியுள்ளது. மாநில உரிமைகளை பறித்தது, கல்வி நிதியை தராதது என அனைத்து விதத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜ உள்ளது. அதனால், பாஜவுக்கு எதிரான மனநிலையே தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. பாஜவோடு சேர்ந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பே தவிர, வெற்றி கிடைக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.