தமிழ்நாடு முழுவதும் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : தமிழ்நாடு முழுவதும் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உத்தரவிடக் கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அருளரசன் என்பவர் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தமிழ்நாடு முழுவதும் சாலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றுவதற்காக நீதிமன்றத்திற்கு வருவது என்பது ஏற்கத்தக்கது அல்ல. பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் கடமை.
கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேனர், பிளக்ஸ் போர்டுகளால் உயிரிழப்புகள் நேர்ந்தால், அதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே உடனடியாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்றி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், "இவ்வாறு உத்தரவு பிறப்பித்தனர்.