தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து; ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கினர்
சென்னையில் பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜாமியா மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கலந்து கொண்டார். இதேபோல சென்னை தீவுத்திடல், திருவல்லிக்கேணி பெரிய மசூதி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழவேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினர். தொழுகையை முடித்து வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர். இவற்றில் 3ல் 2 பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இது மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து படைத்தனர். பக்ரீத் தொழுகை நடந்த அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல இடங்டகளில் நீண்ட வரிசையில் நின்று மட்டன், சிக்கன் பிரியாணியை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.
வழக்கமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து சுமார் 1000 இளைஞர்கள் ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக நியமிக்கப்படுவார்கள். இந்த முறை சவுதி அரசு இதனை ரத்து செய்துள்ளது. சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இதுகுறித்து அந்நாட்டு அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியாவில் அமலில் இருந்ததால் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஏராளமான ஹஜ் பயணிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.