தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடமாக குறைப்பு
சென்னை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, ‘108 ஆம்புலன்ஸ்’ சேவை செயல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 1,300 க்கும் மேற்பட்ட ‘108 ஆம்புலன்ஸ்’வாகனங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதற்காக 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
நாள்தோறும் அவசர வாகனச் சேவை தொடர்பாக இந்த ஊழியர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகளைக் கையாள்கிறார்கள். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்த 11.46 நிமிடங்களுக்குள் அவசர சேவை வாகனம் சம்பவ இடத்திற்குச் சென்றுவிடும். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் நாளுக்கு நாள் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, மெட்ரோ கட்டுமான பணிகள் மேம்பால கட்டுமான பணிகள் இதர சாலை பணிகள் காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து செல்வதற்கு காலதாமதம் ஏற்படும் சூழல் இருந்து வருகிறது .
ஆம்புலன்ஸ் சேவையை தடையின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அதிக விபத்து கண்டறியப்படக்கூடிய பகுதிகள், அடர்த்தி மிக்க குடியிருப்பு பகுதிகள் , குடிசைப் பகுதிகள் போன்றவற்றை கண்டறிந்து ஹாட்ஸ்பாட்டுகளாக அடையாளப்படுத்தி தமிழக முழுவதும் 108 ஆம்புலன்ஸ்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன . இத்திட்டத்தின் மூலமாக சராசரியாக ஆம்புலன்ஸ் சேவை பெறுவதற்கான காத்திருப்பு நேரம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரியவந்துள்ளது.
முக்கிய பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் கட்டளை மையத்திற்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை அணுகிட வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சமாக சென்னையில் காத்திருப்பு நேரம் 5 நிமிடமாகவும் , செங்கல்பட்டு மற்றும் கடலூரில் 7 நிமிடமாகவும் மற்ற பிற மாவட்டங்களில் 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர்வதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.