தமிழகம்... ஏறுமுகம்
இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த 2023-2024ம் நிதியாண்டிற்கான தொழில்துறை ஆய்வறிக்கையின்போது தெரிவித்திருந்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் இது அபரிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பங்கேற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இதில், ரூ.6.64 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் பல லட்சம் பேருக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவின் டெட்ராய்ட் என கூறுமளவுக்கு தமிழ்நாடு, உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களின் தாயகமாகவும் திகழ்கிறது.
மாநிலத்தில் தொழில்துறை, ஆட்டோமொபைல்கள், ஜவுளி, தோல், மின்னணுவியல் மற்றும் கனரக பொறியியல் போன்ற அதனை சார்ந்த துறைகள் வலுவான கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள் ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பொறியியல் தொழில்களில் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த தானியங்கி வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 14.6 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
மேலும், இந்தியாவிலேயே 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியையும் தமிழகம் எட்டிப் பிடித்திருப்பது வரவேற்க்கத்தக்கது. அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத்திலும் தடம் பதிக்க உள்ளது தமிழ்நாடு. அதாவது, விண்வெளி தொழில்நுட்பத்துறையில் மிக முக்கியம் பகிக்கும் உயர்தர ஜெட் இன்ஜின் பாகங்களில் இருந்து, ட்ரோன்கள் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக கோவை அருகே 360 ஏக்கரில் பாதுகாப்பு தொழிற்துறைப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. மேலும், சூலூரில் 200 ஏக்கர் பரப்பளவில் விமானம் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஓடுதள அணுகு வசதியுடன் கூடிய வான்வெளிப் பூங்கா அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சியின் தொடர்ச்சியாக கோவையில் இன்றும், நாளையும் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் சுமார் 39 நாடுகளில் இருந்து 254 பங்கேற்பாளர்கள், முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மாநாட்டை துவக்கி வைக்க உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.126.12 கோடியில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்ட உள்ளது குறிப்பிடதக்கது. இம்மாநாடு மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வருகை தமிழகத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால், நம் மாநிலம் பொருளாதார வளர்ச்சிப்பாதையில் விரைவில் விண்ணளாவிய புகழ் பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.