தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 37 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அரசு வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 37 டிஎம்சி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு சுப்பிரமணியம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணை இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,684 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 12,850 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது. கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு செப்டம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 36.76 டி.எம்.சி நீரினை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் வழங்க உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.