அக்டோபர் 25ம் தேதி அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு :தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று புதுச்சேரிக்கு அருகில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அது வட தமிழகத்தில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியுடன் இணையவுள்ளது. இதனால், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்ந்துள்ளன. ரேடார் மூலம் இந்த நகர்வை தெளிவாகக் காண முடிகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு சற்று அதிகமாக இருக்கும்.சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மாலை வரை விட்டுவிட்டு மழை எதிர்பார்க்கப்படுகிறது. வட சென்னை புறநகர்ப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழை அடுத்த ஒரு மணி நேரத்திற்குத் தொடரலாம். பின்னர், இந்த மேகக்கூட்டங்கள் மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நகரும்.
டெல்டா மாவட்டங்களில் அதிகாலை முதல் பெரிய அளவில் மழை இல்லை. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. காற்று கிழக்கு திசையில் இருந்து வீசாமல், தென் திசையில் இருந்து வீசக்கூடும். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். கோடியக்கரையில் தெற்கு திசையில் இருந்து வரும் மேகங்களால் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று விட்டுவிட்டு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக்கடலில் இருந்து நீண்டு வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியுடன், தற்போதுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இணையவிருப்பதால், ஒருநாள் கனமழைக்கு இதுவே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அக்டோபர் 25 ஆம் தேதி அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்,