அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என்றும், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் எனவும் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை செய்துள்ளது. 650 பக்கங்கள் கொண்ட அறிக்கை முதல்வரிடம் 2024 ஜூலையில் சமர்ப்பித்தனர்.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும், சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்துக்கென, தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கவும், அது குறித்து ஆய்வு செய்யவும், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கொள்கை வரையறைக் குழு அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சங்கங்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளிடம் நேரடியாக கருத்துகளை இந்த குழு கேட்டறிந்தது. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் பேரில் 600 பக்கம் கொண்ட அறிக்கையை தயார் செய்த குழு, கடந்த 2024 ஜூலையில் முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டார்.