தமிழக புதிய டிஜிபி நியமன விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு
புதுடெல்லி: தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவான பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்புகளை மீறி உள்ளது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை பரிசீலனை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையிலான அமர்வு,‘‘புதிய டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொடுக்கும் பரிந்துரையை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யு பி எஸ் சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற அவமதிப்பு மனுவை முடித்து வைத்தது.
இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவின் அடிப்படையில் யுபிஎஸ்சி நிர்வாகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா மற்றும் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு டிஜிபியாக நியமனம் செய்ய 3 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை யு.பி.எஸ்.சி தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் தற்போது வரையில் புதிய டிஜிபி நியமனம் செய்வது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவதாக ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘புதிய டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் யுபிஎஸ்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனால் புதிய டிஜிபியை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு யு.பி.எஸ்.சி நிர்வாகம் 3 பேரின் பெயர்களை பரிந்துரை செய்த பிறகும் அதுதொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. எனவே புதிய டிஜிபி நியமனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.