4 ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் வெகுவாக குறைவு : நாட்டிலேயே தமிழ்நாடு 3ம் இடத்திற்கு முன்னேற்றம்
சென்னை : திராவிட மாடல் ஆட்சியில் மகப்பேறு இறப்பு விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் வெகுவாக குறைந்து நாட்டிலேயே தமிழ்நாடு 3ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள மகப்பேறு இறப்பு விகிதம் தொடர்பான புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டின் 2021-2023 காலகட்டத்தில் மகப்பேறு மரண விகிதம் ஒரு லட்சம் மகப்பேறுக்கு 35 ஆக குறைந்துள்ளது. 2021 காலகட்டத்தில் இந்த இறப்பு விகிதம் 38 ஆக இருந்தது. இந்திய அளவில் மகப்பேறு மரணம் ஒரு லட்சத்திற்கு 88 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, பிரசவகாலம் வரை கர்ப்பிணிகளின் மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து கண்காணித்தல், குழந்தை பராமரிப்பு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், மலைக்கிராமங்களில் கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட சேவைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மகப்பேறு இறப்பு விகிதத்தை தமிழ்நாடு வெகுவாக குறைத்து நாட்டிலேயே 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.