தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் - மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!!
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 2023-24ல், மதிப்பிற்குரிய போக்குவரத்துத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட, மாநிலத்தின் 20 பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) கணினி வசதியுடன் கூடிய தானியக்க ஓட்டுநர் தேர்வு மையங்களை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்ததிட்டத்தின் ஒரு பகுதியாக, மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், தமது நிறுவன சமூகப்பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், தற்போதுள்ள வழக்கமான ஓட்டுநர் தேர்வு மையங்களை தானியங்கியாக மாற்ற முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, 2025-26 நிதியாண்டில் 10 பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில் தானியக்க மையாங்கள் உருவக்கப்படும்.
தமிழக அரசு மற்றும் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கிடையிலான ஒப்பந்த நியாபக அறிக்கை (MoA) இன்று (14.10.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் மதிப்பிற்குரிய போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. எஸ். எஸ். சிவசங்கர் அவர்களின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திரு. தீரஜ்குமார், ஐ.ஏ.எஸ்., கூடுதல் முதன்மைச் செயலாளர் (உள்துறை), திருமதி ஆர். கஜலட்சுமி, ஐ.ஏ.எஸ்., போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் மற்றும் போக்குவரத்துத்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தைச் சார்ந்த திரு. தருண் அகர்வால், மூத்த துணைத்தலைவர் & CSR தலைவர்; திரு. ஆர். கல்யாணசுந்தர், பொதுமேலாளர் (சாலைப்பாதுகாப்பு); திரு. துஷார்ஜோஹ்ரி, துணை பொதுமேலாளர் (சாலைப்பாதுகாப்பு); திரு. ரிஷப்அகர்வால், மூத்த மேலாளர் (சாலைப்பாதுகாப்பு); மற்றும் திரு. பி. கணேஷ், மேலாளர் (நிறுவனவிற்பனை) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இந்த முயற்சி, ஓட்டுநர் தேர்வுகளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படையாகவும் திறம்படவும் ஒரே தரத்தில் நடத்துவதற்கான வழியைக் காண்பதுடன், மாநிலத்தின் சாலைப்பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.