தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு தள்ளுபடி!!
சென்னை : தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றதையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, அவர் டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஆர். வரதராஜ் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு ப்ளீடர், எட்வின் பிரபாகர், இதே போன்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
இதனையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி டிஜிபி நியமனம் செய்யப்பட இருப்பதால், மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யு.பி.எஸ்.சி.க்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை. டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.