தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான் : பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை : தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான் என்று பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ``மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்!" இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை ஜே.பி நட்டா அமைத்தார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி நியமிக்கப்பட்டார்.