உலகம் முழுவதும் புகழ்பெற்ற பூமி தமிழ்நாடு ஏஐ, தொழில்துறை புரட்சி 4.0 பணி கலாச்சாரத்தை மாற்றும்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விழாவில் ஜனாதிபதி பேச்சு
திருவாரூர்: உலகம் முழுவதும் புகழ்பெற்ற பூமி தமிழ்நாடு. ஏஐ, தொழில்துறை புரட்சி 4.0 பணி கலாச்சாரத்தை மாற்றும் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விழாவில் ஜனாதிபாதி முர்மு பேசினார். திருவாரூர் மாவட்டம், நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கத்தில் 10வது பட்டமளிப்பு விழா நேற்று மதியம் நடந்தது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் தங்க பதக்கம் பெற்ற 34 மாணவிகள் மற்றும் 11 மாணவர்கள் என 45 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது:தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அழகிய தமிழ்நாடு மாநிலம் அதன் பண்டைய நாகரிகத்திற்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற பூமி. திருவாரூர் அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. இந்த நாளில் அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக பதக்கம் வென்றவர்களுக்கும், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி என்பது தனிநபர் வளர்ச்சியை சமூக வளர்ச்சியுடன் இணைப்பதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
இன்று பெண்கள் மூன்றில் இரண்டு பங்கு தங்க பதக்கங்களை வென்றிருப்பதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இவை சமூகத்தின் ஆரோக்கியமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் அறிகுறிகள். கடந்த இரண்டு தசாப்தங்களில் இணைய புரட்சி நமது உலகத்தை மாற்றியமைத்துள்ளது. நாம் நினைத்து பார்க்காத பல புதிய தொழில்கள் உருவாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை புரட்சி 4.0 பணி கலாச்சாரத்தை மேலும் மாற்றும். அத்தகைய துடிப்பான சூழலில், புதிய திறன்களை கற்றுக்கொள்ளக்கூடியவர்கள் மாற்றத்தின் தலைவர்களாக மாறுவார்கள். முக்கியமாக, உதவிக்கரம் தேவைப்படுபவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும், ஒரு சமூகம் முன்னேறுவதும், ஒரு நாடு வளர்வதும் இப்படித்தான். தாழ்த்தப்பட்ட அல்லது பின்தங்கிய மக்கள் பிரிவுகளுக்கு நீங்கள் சிறப்பு அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் 442 மாணவர்கள், 568 மாணவிகள் என மொத்தம் 1,140 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், நாகை எம்பி செல்வராஜ், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2 முறை பாடப்பட்ட தேசிய கீதம்
மதியம் 2:30 மணியளவில் பட்டமளிப்பு விழா தொடங்கப்பட்டது. முதலில் தேசிய கீதமும், 2வதாக தமிழ் தாய் வாழ்த்தும் பாடப்பட்ட நிலையில் விழா முடிவுற்ற பின்னர் மீண்டும் தேசிய கீதம் 2வது முறையாக பல்கலைக்கழக மாணவிகள் மூலம் பாடப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ஜனாதிபதி தரிசனம்
பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு நேற்று மாலை 4.10 மணியளவில் ஜனாதிபதி முர்மு சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்ற ஜனாதிபதிக்கு, பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோயிலின் உள்ளே சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு ஜனாதிபதி ஆப்பிள், பழங்கனை வழங்கினார். பின்னர், ஜனாதிபதிக்கு ஆண்டாள் யானை ஆசிர்வாதம் வழங்கியது. பின்னர் ஆண்டாள் யானை, மவுத் ஆர்கன் வாசித்து அசத்தியது, இதை ஜனாதிபதி ரசித்தார். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு கோயிலில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை 6 மணியளவில் வந்தார். பின்னர் அங்கிருந்து, தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். ஜனாதிபதி வருகையையொட்டி பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு: மாஜி அமைச்சர் வீடு, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கு நேற்று காலை 8.27 மணிக்கு ஒரு மெயில் வந்தது. ஆங்கிலத்தில் வந்த அந்த மெயிலில், ‘கோ பேக் ஜனாதிபதி திரவுபதி முர்மு’. மதியம் 2 மணிக்குள் வெடிகுண்டுகள் செல்போன் மூலம் வெடிக்க வைக்கப்படும். கண்ணாமூச்சி ரேரே... கண்டுபிடி யாரு?... மதியம் 2 மணிக்குள் பள்ளியில் உள்ள மாணவர்களும், பணியாளர்களும் வெளியேறவேண்டும்.
இதே போல் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் 20 நிமிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. தகவலறிந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி மற்றும் மாஜி அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்து மெயில் அனுப்பிய ஆசாமி யார் என விசாரித்து வருகின்றனர்.