தமிழில் வேத மந்திரங்கள் முழங்க திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ராஜகோபுர வாசல் யாகசாலையில் சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதருக்கு 5, நடராஜருக்கு 5, பெருமாளுக்கு 5 மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 12 என மொத்தம் 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு, தொடர்ந்து 6 நாட்கள் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. குடமுழுக்கு தினமான நேற்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, 12ம் கால யாகசாலை பூஜைகளில் கோயிலின் உள்ளே மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, மரபாணி, வாசனை தான்ய திருக்குட நீராட்டு நடந்தது.
ராஜகோபுர வாசல் யாக சாலையில் அதிகாலையில் சுவாமி சண்முகருக்கு 12ம் கால யாக பூஜைகளாக மகா நிறைஅவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.22 மணிக்கு கோயில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு தந்திரிகள் மற்றும் போத்திமார்களும், விநாயகர், சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை, ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்க பெருமானுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாளுக்கு பட்டாச்சாரியார்களாலும் வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
முன்னதாக, நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் நேற்று மாலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். குடமுழுக்கினை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே திருச்செந்தூரில் குவியத் தொடங்கினர். மொத்தத்தில் நேற்று கோயில் கடற்கரை, கோயில் வளாகங்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கில் கலந்து கொண்டு வழிபட்டனர். டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
* ஜப்பான் பக்தர்கள்
கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இருந்து பலர் பங்கேற்றனர். ஜப்பானைச் சேர்ந்த பாலகும்பா குருமணி தலைமையில் 25 பக்தர்கள் குழுவாக பங்கேற்று வழிபட்டனர். ஜப்பானில் முருகனை சரவணனாக வழிபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
* ரயிலில் இரு மடங்கு கட்டணம்
கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 7.10 மற்றும் 10.10 மணிக்கு இயக்கப்பட்ட நெல்லை பாசஞ்சர் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. அதைத் தொடர்ந்து காலை 11.20 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயிலைத் தொடர்ந்து பகல் 12.20 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து இயக்கப்படும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்கும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் திரண்டதால் ரயில் நிலைய ஊழியர்கள் டிக்கெட் கொடுக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் சிறப்பு ரயிலில் கட்டணம் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு ரூ.40 (சாதாரண கட்டணம் ரூ.20) என வசூலிக்கப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
* விஐபி பாஸ்கள்
திருச்செந்தூர் குடமுழுக்கினை காண பக்தர்களுக்கு கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நள்ளிரவு முதலே காத்திருந்து குடமுழுக்கை பார்த்தனர். மற்றபடி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் விஐபிகளுக்கு என தனி பாஸ் வழங்கப்பட்டது.