புரோ கபடி -12; தமிழ்தலைவாஸ் கேப்டன் ஷெராவத்: இந்த முறை தமிழக வீரர்கள் இல்லை
சென்னை: புரோ கபடி லீக் போட்டியின் 12வது தொடர் இம்மாதம் 29ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சென்னையின் உள்ளூர் அணியாக தமிழ் தலைவாஸ் உள்ளது. முதல் முறையாக 5வது தொடரில் அறிமுகமான தலைவாஸ் அணிக்கு, இதுவரை கோப்பை வெறுங்கனவாகவே உள்ளது. அதனால் இந்த முறை ஏராளமான புதுமுகம் மற்றும் நட்சத்திர வீரர்களுடன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் களம் காண உள்ளது. இந்நிலையில் அணி வீரர்கள், சீருடை, தலைமை பயிற்சியாளர் அறிமுகம், கேப்டன் தேர்வு ஆகிய நிகழ்வுகள் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் புதிய கேப்டனாக பவன் ஷெராவத் தேர்வு செய்யப்பட்டார். துணைக் கேப்டனாக அர்ஜூன் தேஷ்வாலை தேர்வு செய்தனர். பின்னர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள சஞ்சீவ் பலியான், துணை பயிற்சியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தமிழ் தலைவாஸ் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
கூடவே இந்த தொடருக்கான புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தலைவாஸ் தலைமை செயல் அலுவலர் சுஷேன் வசிஷ்த், ‘புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பவன் ஷெராவத் ஏற்கனவே தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி உள்ளார். அனுபவமும் திறமையும் வாய்ந்தவர். இந்த முறை அவரை 2.26கோடி ரூபாய்க்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கி உள்ளது. அதேபோல் தான் துணைக் கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் உள்ளிட்ட எல்லா வீரர்களும் அதிரடி ஆட்டக்காரர்கள். புதிய யுக்திகளுடன் களம் காண இருக்கிறோம். இந்த முறை சென்னையிலும் போட்டிகள் நடப்பது உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை பெற வசதியாக இருக்கும்.
தமிழ்நாட்டு வீரர்கள் யாரும் இந்த முறை தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெறவில்லை.
அணியில் ஒவ்ெவாரு இடத்துக்கும் போதுமான வீரர்கள் இருப்பதால் தமிழக வீரர்கள் தேர்வு செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் இடதுபுற ஆட்டக்காரர்களே அதிகம் உள்ளனர். வலது முனையில் விளையாட, பாட போதுமான வீரர்கள் இல்லை. அடுத்த ஆண்டு தமிழ் நாடு வீரர்களை சேர்க்க வீரர்கள் தேடுதல் வேட்டையை இப்போதே தொடங்க உள்ளோம்’ என்று கூறினார். விசாகப்பட்டினத்தில் தொடங்கும் புரோ கபடியின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை களத்துக்கான ஆட்டம் செப்.29ம் தேதி முதல் அக்.12ம் தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும்.