தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட மின்நூலகம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
சென்னை: சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை கொண்டிருந்த தமிழ் மின்நூலகம் தற்போது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலித் தொகுப்புகள், காணொலிகள், நிலவரை படங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு பல்லூடகப் பயன்பாட்டுப் பெட்டகமாக மின்நூலகம் உருமாற்றப்பட்டுள்ளது. தமிழ், பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் மற்றும் பிற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்டுள்ள தமிழ் மின்நூலகத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளர் பிரஜேந்திர நவ்னிட், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் கோமகன், உதவி இயக்குநர் செல்வ புவியரசன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.