சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
சென்னை: சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழ் வளர்ச்சி துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது சட்டமன்ற பேரவையில், “ஊடகங்களில் தமிழ் செய்திகளை தவறில்லாமலும், அழகாகவும், சரியாகவும் உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு பேரை தெரிவு செய்து அவர்களை பாராட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்” என அறிவிகிகப்பட்டது.
அதன்படி 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருதாளருக்கான தகுதியானவர்களாக வா.கி.சர்வோதய ராமலிங்கம், வேதவள்ளி செகதீசன்,ஜோ. அருணோதய சொர்ணமேரி, ப.மோகன்ராஜ் ஆகிய நான்கு ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கும் நேற்று 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.