தமிழ் ரசிகர்களுக்காக பெரிய மைதானத்தில் சிம்பொனி இசை: இளையராஜா உறுதி
சென்னை: விழா இறுதியில் இளையராஜா ஏற்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:
இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்கு அரசு பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். அதுவும் இந்த விழாதான். இசை உலக சரித்திரத்தில் இது ஒரு மிகப்பெரிய விஷயம். சிம்பொனி இசையமைக்க செல்வதற்கு முதல் நாளே என்னை நேரில் வந்து வாழ்த்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிம்பொனி இசையமைத்து விட்டு சென்னைக்கு நான் திரும்பியபோது, எனக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இன்று பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது. இதை எல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் என் மேல் வைத்த அதே அன்பை அவரது தவப்புதல்வன் மு.க.ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தது கலைஞர்தான். காரைக்குடியில் நடந்த பாராட்டு விழாவை தலைமை ஏற்று நடத்திய கலைஞர், எனக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கினார். இப்போது அதுவே எனக்கு பெயராக மாறிவிட்டது.
நான் கிராமத்தில் இருந்து வந்தவன், அதனால் கிராமத்து சாயல் இருக்கக்கூடாது. ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளேன் என்பதால், அந்த இசையின் சாயலும் வந்துவிடக்கூடாது. அந்த படங்களின் பின்னணி இசை சாயலும் வந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டுக்காரன் என்பதால், தமிழ்நாட்டு சாயலும் வரக்கூடாது. நான் ஒரு இந்தியன் என்பதால், இந்திய சாயலும் வந்துவிடக்கூடாது. ஆனால், உலகிலுள்ள பல இசைக்கலைஞர்களின் இசையை நான் கேட்டுள்ளேன் அல்லவா. அவர்களின் சாயலும் வந்துவிடக்கூடாது. எனது சிம்பொனி இசையில், அவர்களின் இசையை நான் பயன்படுத்தி விட்டேன் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது. இவ்வளவு கட்டுப்பாடுகளையும் மீறி, 35 நாட்களில் சிம்பொனி இசையை நான் உருவாக்கினேன். எனது கற்பனையில் தோன்றிய இசையை 87 பேருக்கு எழுதிக் கொடுத்தேன். அதை அவர்கள் வாசித்தார்கள். என் எண்ணத்தில் தோன்றியதை ஒலி வடிவில் வடித்தேன். ஏராளமான சுய கட்டுப்பாடுகளுடன் சிம்பொனி இசையை உருவாக்கினேன்.
இதற்காக நான் நன்றி தெரிவிக்க வேண்டியது எனது மகன்கள் கார்த்திக் ராஜாவுக்கும், யுவன் சங்கர் ராஜாவுக்கும்தான். அவர்களுடன் நான் எனது நேரத்தை செலவழித்து இருந்தால், இந்த சிம்பொனி இசையை நான் அமைத்திருக்க முடியாது. சிம்பொனியையும் அரங்கேற்றி இருக்க முடியாது. சிம்பொனி இசையை கேட்டு அழுததற்கு சாட்சிதான் கமல். சிம்பொனி இசையை தமிழ்நாட்டுக்கும் இசைத்து காட்ட வேண்டும் என்ற எனது முடிவுக்கு முதல்வர் உடனே சரி என்று சொன்னார். சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதனால், மிகப்பெரிய மைதானத்தில் சிம்பொனி இசையை இதே 87 கலைஞர்களை வைத்து நடத்துவேன். அதற்கு தமிழக முதல்வர் எனக்கு தேவையான உதவிகளை செய்வார் என்று நம்பிக்கையுடன், அவரை கேட்காமலேயே சொல்கிறேன்.