தமிழ் வளர்ச்சித்துறை என்ற பெயரை தமிழ் மேம்பாட்டு துறையாக மாற்ற கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரை தமிழ் மேம்பாட்டுத்துறை என்று மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த முத்து சுப்பிரமணியம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ் வளர்ச்சித் துறை என்ற பதம் தவறானது. மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், மேம்பாட்டு துறைகள் என்றே அழைக்கப்படுகின்றன. அதனால், தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரை, தமிழ் மேம்பாட்டு துறை என்று மாற்ற வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரை மேம்பாட்டுத்துறை என்று மாற்றுவதற்கு துறையின் இயக்குனரே கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால், தமிழ் மேம்பாட்டு துறை என்று பெயர் மாற்றம் செய்தால், தமிழ் மொழி மேம்படுத்தப்பட வேண்டிய குறை நிலையில் உள்ளதாக பொருள் கொள்ளப்படும் என்பதால், துறையின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வளர்ச்சி என்பதற்கும், மேம்பாடு என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. எனவே, துறையின் பெயரை மாற்ற மறுப்பு தெரிவித்த கடிதத்தை ரத்து செய்து, தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரை தமிழ் மேம்பாட்டு துறை என்று மாற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழ் வளர்ச்சித் துறையின் பெயரை மாற்ற மறுப்பு தெரிவித்ததன் மூலமாக, மனுதாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.