தமிழ்நாட்டில் கடல் உணவு ஏற்றுமதி முடங்கும் அபாயம்: அமெரிக்காவின் 50% இறக்குமதி வரிவிதிப்பால் கடும் பாதிப்பு
அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பால் தமிழ்நாட்டில் சுமார் 5000 கோடி அளவிற்கு கடல் உணவு ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 50% அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி உள்ளதால் அமெரிக்காவை நம்பி இருந்த கடல் உணவு உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு சுமார் 25 நிறுவனங்கள் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்கின்றன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடியிலிருந்து பதப்படுத்தப்பட்ட இறால், கனவாய் மீன், நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவிற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 20 கன்டெய்னர்களில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் புதிய வரிவிதிப்பு இந்த நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்திய கடல் உணவுகளை வர்த்தகம் செய்யும் அமெரிக்க வர்த்தகர்கள் கடல் உணவு பொருட்களை அனுப்ப வேண்டாம் என்றும் அவ்வாறு அனுப்பினாலும் தாங்கள் துறைமுகத்திலிருந்து கன்டெய்னர்களை எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள 500டன் கடல் உணவு பொருட்கள் கிரும்பி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு மட்டும் ஆண்டுக்கு 20,892 கோடி முதல் ரூ.23 ஆயிரம் கோடி பதிப்பிலான கடல் உணவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் தமிழ்நாட்டில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடல் உணவு ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் இறால் வளர்ப்பு விவசாயிகள் பெண் தொழிலாளர்கள் என 30 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பால் விசைத்தறி தொழிலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். குளிர்காலத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆயுத்த ஆடைகள் உரிய கால கட்டத்தில் ஏற்றுமதி செய்யப்படாத பட்சத்தில் அவை பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதே ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.