தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிமிர்ந்து நில் திட்ட பயிற்சி வகுப்பு
*கலெக்டர் தொடங்கி வைத்தார்
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிமிர்ந்து நில் திட்டம் சார்ந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் சுகபுத்ரா தொடங்கி வைத்தார்.
கலெக்டர் பேசுகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் சட்டசபை அறிவிப்பில், இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க நிமிர்ந்து நில் என்ற திட்டத்தை அறிவித்து, 16.7.2025ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவது, அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத்திறன் வளர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, இ.காமர்ஸ் மற்றும் உற்பத்தித்துறை போன்ற துறைகளில் பயிற்சி அளிப்பது திட்ட நோக்கமாகும்.
திட்டத்தில் மாணவ தொழில்முனைவோர்களுக்கு ரூ.19.57 கோடி, நகரங்களில் 9 ஆயிரம் இளைஞர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மையமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் மைய கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிமிர்ந்து நில் திட்டத்தை கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்படுத்தும். நிமிர்ந்து நில் திட்டமானது மாணவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும்.
மாணவர்கள் சமுதாயத்தில் அல்லது வேறு தொழில்களில் இருக்ககூடிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை மாதிரி வடிவம் கொண்டு விளக்கும் பட்சத்தில் அந்த யோசனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மாணவர்களுக்கு 2 நாள் ஐடியேசன் கேம்ப் பயிற்சி, 3 நாள் பூட் கேம்ப் பயிற்சி வழங்கப்படும். இறுதியாக சென்னையில் நடைபெறும் இறுதி சுற்றில் வெற்றி பெறும் 30 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். வெற்றி பெறும் மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வளர் தொழில் மையங்களோடு இணைப்பு ஏற்படுத்தி வசதிகள் செய்து தரப்படும். இந்தபயிற்சி வகுப்பை பயன்படுத்தி திட்ட நோக்கம் குறித்து மாணவர்களிடம் எடுத்து செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட திட்ட மேலாளர் பிலிப் மில்டன், ராமநாதபுரம் மாவட்ட திட்ட மேலாளர் பொன்வேல்முருகன், ஆலோசகர் ஐயப்பன், ஒருங்கிணைப்பாளர் டேனி உள்பட 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர்.