தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் கிராமப்புற மாணவர்கள் மிகப்பெரிய பதவி அடைய முடியும்
திருச்சுழி : கிராமப்புற மாணவர்கள் நான் முதல்வன் திட்டம் மூலமாக மிகப்பெரிய பதவியை அடைய முடியும் என்று, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற திருச்சுழி மாணவர் தெரிவித்தார்.திருச்சுழி அருகே மண்டபசாலை கிராமத்தை சேர்ந்த டெய்லர் சுப்புராஜ். இவரது மகன் சங்கர்பாண்டியராஜ். சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார்.
தற்போது நான் முதல்வன் திட்டத்தில் படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற இவர், அகில இந்திய அளவில் 807வது ரேங்க் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அவர் படித்த எம்.ரெட்டியபட்டி அரசுப்பள்ளி மற்றும் தும்முசின்னம்பட்டி அரசுப்பள்ளிக்கு நேரில் சென்று தனக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.
சாதனை படைத்த மாணவர் சங்கர் பாண்டியராஜூக்கு தும்முசின்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி மாலை, சால்வை அணிவித்து புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கர் பாண்டியராஜ் பேசுகையில், ‘‘திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் அரசு பள்ளியில்தான் படித்தேன். பின்னர் தொலைதூர கல்வி படித்து, சென்னையில் கேட்டரிங் சர்வீஸில் பணி, மாணவர்களுக்கு டியூஷன் என பணியாற்றி, ஏழு முறை யுபிஎஸ்சி தேர்வெழுதி தோல்வியை கண்டேன். அதிலும் சோர்ந்து விடாமல் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.7500 கிடைத்ததால் வேலைக்கு கூட செல்லாமல் படித்தேன்.
சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகத்திலும் புத்தகங்களை படித்தேன். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானது, எழுதியது, நேர்முகத் தேர்வு என அனைத்தையும் தமிழிலேயே படித்து வெற்றி பெற்றேன். எனது ரேங்கிற்கு ஐஆர்எஸ் ஆக வாய்ப்புள்ளது. தொடர்ந்து படித்து ஐஏஎஸ் கனவை நிறைவேற்றுவேன்.
கிராமப்புற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலமாக மிகப்பெரிய பதவியை அடைய முடியும் என்பதற்கு நானே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளேன். இந்த யுபிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவருக்கும் நான் முதல்வன் திட்டம் பயனுள்ளதாக உள்ளது.
கிராமப்புறத்தில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் படிக்காமல் இருக்கக் கூடாது. படிப்பதில் முயற்சி செய்ய வேண்டும். அரசு நமக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கிறது.
சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் 99% பொய்யாகவே உள்ளது. மேலும் இவை அனைத்தும் மாணவர்களை தவறான பாதையில் வழி நடத்தி வருகிறது. மாணவர்கள் சரியான வழியில் செல்ல வேண்டும் என்றால் ஆயிரம் புத்தகங்களுக்கு சமமான ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். தினசரி நாளிதழ்கள் படிக்க வேண்டும், அப்போதுதான் அறிவு சார்ந்த தகவல்களை வளர்க்க முடியும். சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரங்களை குறைக்க வேண்டும்.
மாணவர்கள் கிரிட்டிக்கல் திங்கிங், கிரியேட்டிவ் திங்கிங் 2 விஷயங்களை வளர்த்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் என்னைப் போன்று ஆயிரம் மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளுக்கு செல்வர்.
ஆகையால் நான் படித்த பள்ளியின் முன்னாள் மாணவனாக தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்’’ என்று பேசினார்.