தமிழ்நாடு முழுவதும் பூக்கள் விலை கடும் உயர்வு: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களுக்கு கிராக்கி
மதுரை: தமிழ்நாட்டின் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி மலர் சந்தைகளும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் காலையிலேயே களைகட்டியது. மதுரையின் சிறப்பே மல்லிகை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மல்லிகை கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.2000 வரை விற்கப்படுகிறது. பிச்சி ரூ.1200க்கும், முல்லை ரூ.1000ஆக உள்ளது. கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு ரூ.400ஆக இருந்த பிச்சி பூ விலை தற்போது ரூ.1000ஆக உயர்ந்துள்ளது.
அனைத்து பூக்களின் விலையும் தோவாளை மலர் சந்தையில் உயர்ந்துள்ளது. ஓணம் பண்டிகைக்காக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து வாடாமல்லி, கோழிக்கொண்டை, செண்டுமல்லி, செம்மங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள் அதிகளவில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ரூ.10க்கு விற்பனையான செண்டுமல்லி, தற்போது ரூ.130க்கும், ரூ.20ஆக இருந்த ஒரு கிலோ வாடாமல்லி ரூ.250க்கும் விற்கிறது. சங்கரன்கோவில் மலர் சந்தையிலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பண்டிகைகளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுடன், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.