தமிழகத்தில் முதல் முறையாக ஊட்டியில் நாய்கள் பராமரிப்பு பூங்கா
*சுரங்கப்பாதை, சிறு குளம், ஸ்பிரிங்லர் வசதி தயாராகிறது
ஊட்டி : தமிழகத்தில் முதல்முறையாக ஊட்டி மரவியல் பூங்கா வளாகத்தில் ரூ.40 லட்சம் செலவில் வளர்ப்பு பிராணியான நாய்களுக்கான பராமரிப்பு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
மனிதர்களின் விருப்பமான செல்ல பிராணியாக நாய்கள் உள்ளன.
காலை மற்றும் மாலை வேளையில் நாய்களுடன் நடைபயிற்சி செய்வதை பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நாய்களால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கும் ஆளாகி வருகின்றனர். தினமும் ஏதாவது ஒரு பகுதியில் நாய் கடித்து குழந்தைகள், முதியவர்கள் காயம் என்கின்ற செய்தியை காண முடிகிறது.
இதனால், நாய்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
செல்ல பிராணிகள் வளர்ப்போர், நாய் இனப்பெருக்கம் மேற்கொள்வோர், செல்ல பிராணிகள் விற்பனை செய்வோர் மற்றும் செல்ல பிராணிகள் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் தாங்கள் வசிக்க கூடிய பகுதிகளுக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது செல்லப் பிராணியான நாயையும் அழைத்து வருகின்றனர். ஆனால், இங்குள்ள பூங்காக்கள், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் நாயை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால், அவற்றை தனியாக அறையில் விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காகவும், ஊட்டியில் நாய்கள் வளர்ப்பவர்கள் அவற்றை தனியாக நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வதற்காகவும் நாய்களுக்காக பிரத்யேக பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஊட்டி மரவியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டு அங்கு நாய்களுக்கான பிரத்தியேக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ வசதியாக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் இருப்பது போல், இங்கு வளர்ப்பு பிராணிகளான நாய்கள் விளையாடி மகிழ புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை, சிறு குளம், ஸ்பிரிங்லர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இது தவிர குப்ரஸ் மரங்களை கொண்டு அலங்கார வேலி உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் நாட்டிலேயே முதன்முதலில் நாய்களுக்காக பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை மயிலாப்பூரில் நாய்களுக்கு பிரத்யேக பூங்கா அமைக்க அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
அந்த வகையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா பயன்பாட்டிற்கு வர உள்ளது. அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் செலவில் வளர்ப்பு பிராணியான நாய்களுக்கான பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இது நாய்களுக்கு மிகப்பெரிய புத்துணர்வு மையமாக இருக்கும்.
இதன் பராமரிப்பு பணிகள் தோட்டக்கலைத்துறையிடம் இருக்கும். நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணிக்காக மரவியல் பூங்காவில் ஏற்கனவே இருக்கும் ஒரு மரம் கூட வெட்டப்பட மாட்டாது. 2 மாதங்களுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த ஒரு சில நாட்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த பூங்காவுக்கு அழைத்து வரும் நாய்களை பதிவு செய்திருப்பது கட்டாயம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.