தமிழ்நாட்டில் போலி வாக்காளர்களை நீக்க SIR பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கோவை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; எஸ்ஐஆருக்கு ஆதரவாக அதிமுக வழக்கு தொடர்ந்தது உண்மைதான். போலி வாக்காளர்களை நீக்க எஸ்ஐஆர் பணிகள் அவசியம். எஸ்ஐஆர் என்றாலே அலறுகின்றனர், பதறுகின்றனர். எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ள ஒரு மாதம் காலம் இருக்கிறது. 300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும்.
எஸ்ஐஆர் பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. எஸ்.ஐ.ஆர் குறித்து தவறான செய்தி பரவி வருகிறது. தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதே எஸ்.ஐ.ஆரின் நோக்கம். வீடு மாறி சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்கள் பல ஆண்டுகாலமாக வாக்காளர் பட்டியலில் உள்ளனர். தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற எஸ்ஐஆர் பணி முக்கியம். முறைகேடுகளாக இருக்கின்ற வாக்காளர்களை நீக்க எஸ்.ஐ.ஆர். அவசியம் என அவர் தெரிவித்தார்.
என் மகனையோ, மருமகனையோ கட்சியில், ஆட்சியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இதற்குமுன் கட்சியில் இருந்து விலகியவர்கள் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை என் மீது வைத்தார்களா? என் மீது வேறு குற்றச்சாட்டு வைக்க முடியாததால் குடும்ப அரசியல் எனக்கூறுகிறார் செங்கோட்டையன். தொண்டர்களை உற்சாகப்படுத்த, கட்சியை வளர்க்க விஜய் அவ்வாறு பேசியுள்ளார் என திமுக - தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.