தமிழ்நாட்டில் இருந்து போலி வேட்பாளர்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்துள்ளது: தெலுங்கு தேசம் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து போலி வேட்பாளர்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்துள்ளது என தெலுங்கு தேசம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. திருத்தணியை சேர்ந்தவருக்கு போலி வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கி, ஆந்திராவின் நகரி 6வது வார்டுக்கான நகராட்சித் தேர்தலில் போட்டியிட வைத்து கவுன்சிலராக்கியதாக, அப்போதைய எம்.எல்.ஏ ரோஜா மீது தெலுங்கு தேசம் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தது.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருக்கு சாய் சந்தியா ராணி என்ற பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை பெறப்பட்டதாக தெரிவித்து ஆந்திரா முன்னாள் எம்.எல்.ஏ மீது தெலுங்கு தேசம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தது. தமிழ்நாட்டில் இருந்து போலி வாக்காளர்கள் மட்டுமின்றி போலி வேட்பாளர்களையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளது. 2 மாநிலங்களில் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளின் நகலையும், போலி வேட்பாளருக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா பரப்புரை மேற்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டது.