தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கிய தேசிய தேர்வு முகமை, ஒன்றிய அமைச்சருக்கு நன்றி: சு.வெங்கடேசன்
சென்னை: தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கிய தேசிய தேர்வு முகமை, ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் பி.எட் மாணவர்களுக்கான Swayam ( ஸ்வயம்) தேர்வுகள் வரும் டிசம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது . இத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத கல்வியியல் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அந்தத் தேர்வுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது . குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து மட்டும் 50 மாணவர்களுக்கு கர்நாடகத்தின் மைசூர் , மங்களூர் , பெங்களூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறித்து ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு செய்யாத தேர்வு மையங்களான பக்கத்து மாநிலங்களான கர்நாடகா , கேரளா மாநிலங்களில் பல நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டின் கல்வியியல் கல்லூரி மாணவர்களால் ஸ்வயம் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிற்கு உள்ளேயே தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன்.
தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாட்டிற்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கி தேசிய தேர்வு முகமை புதிய தேர்வு நுழைவுச் சீட்டினை வழங்கி உள்ளது. இதனால் இந்தத் தேர்வுக்காக அண்டை மாநிலங்களுக்கு பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .
வரும் காலங்களில் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகள் , நுழைவுத் தேர்வுகள் என அனைத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்புகளை பறிக்கும் இந்த மாதிரியான நடவடிக்கையில் அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தற்போது வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கியமைக்காக தேசிய தேர்வு முகமைக்கும் , ஒன்றிய அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.