ஓரணியில் தமிழ்நாடு - 2.7 கோடி பேர் சேர்ப்பு.. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு குறித்து செப்.20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்து ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்: திமுக
ஓரணியில் தமிழ்நாடு குறித்து செப்.20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் திமுக சென்று சேர்ந்துள்ளது என்றார்.
"ஓரணியில் தமிழ்நாடு - 2.7 கோடி பேர் சேர்ப்பு": ஆர்.எஸ்.பாரதி
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 2.7 கோடியை தாண்டியுள்ளோம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் சேர்த்துள்ளோம். பிற கட்சிகளை போல் அல்லாமல் துல்லியமாக உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருகிறது என அவர் தெரிவித்தார்.
இயலாமையால் எடப்பாடி விமர்சனம் செய்கிறார்: ஆ.ராசா
தன்னுடைய இயலாமையால் ஓரணியில் தமிழ்நாடு குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுகவுக்காக அமித் ஷா முடிவெடுப்பாரா? என்றும், அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று அமித் ஷா முடிவெடுப்பாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன் என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவிடம் அதிமுக மண்டியிட்டுவிட்டது: ஆ.ராசா
அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டு விட்டது; தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்கிறார்கள். மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட கொள்கைகளின் அடிப்படையில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
"அரசியல்சாசன அமைப்புகளை பாஜக சிதைக்கிறது": ஆ.ராசா
உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அரசியல்சாசன அமைப்புகளையும் பாஜக சிதைக்கிறது. நாடாளுமன்றத்தில் முறையாக விவாத்தித்துதான் மசோதாக்களை பாஜக நிறைவேற்றுகிறதா? என அவர் தெரிவித்தார்.