தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி!
சென்னை: தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் செல்லக் கூடிய வழித்தடத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டு பணியில் ரயில்வே நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்ததன் காரணமாக மின்கம்பம் வெடித்து பயங்கர சத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை கிண்டியில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்ல கூடிய மின்சார ரயில்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பணிகளுக்கு செல்ல கூடியவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து பயணிகள் அரைமணி நேரத்துக்கு மேலாக தவித்து வருவதால், ரயிலில் இருந்து இறங்கி அருகில் உள்ள பேருந்து நிலையம் சென்றனர். இதற்கிடையே மின்கம்பத்தில் விழுந்த மரக்கிளையை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2 மணி நேரத்திற்க்கு மேல் இந்த பணி நடைபெறும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.