தாம்பரம் விமானப்படைத் தளத்தில் அக்னிவீரர் தேர்வு: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு
சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் அக்னிவீரர் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இருந்து 3,000 இளைஞர்கள் குவிந்து இருந்தனர். நான்கு கட்டங்களாக நடைபெறுகின்ற அக்னிவீரர் தேர்வானது, முதல் கட்டமாக 27ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் சேர்ந்தவர்கள் அக்னிவீரர் தேர்வுக்கு வந்திருந்தனர். அதனை அடுத்து 30ஆம் தேதி கர்நாடக, கேரளா மாநிலத்தில் சேர்ந்த இளைஞர்கள் 5,400க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், லச்சத்தீவு உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், தாம்பரம் விமானப்படைத் தளத்தில் நேற்று இரவு முதலே அதிகளவில் இளைஞர்கள் வந்து அக்னிவீரர் தேர்வுக்காக காத்திருந்தனர். அதிகாலை முதலே அவர்கள் உயரம் மற்றும் அவர்கள் மதிப்பெண் சான்றிதழ் ஆய்வு செய்து, அக்னிவீரர் தேர்வு பணி நடைபெற்றது. இதற்கு காவலர் ஆய்வாளர் சண்முக தலைமையில் 130 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. தமிழக வீரர் மட்டும் 3,000 வீரர்கள் மேல் வந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து 5ஆம் தேதி இறுதி கட்டமாக நடைபெறும் அக்னிவீரர் தேர்வில் பெண்கள் மட்டும் பங்கேற்கிறார்கள். ஆந்திர, தெலுங்கானா, கர்நாடக, கேரளா, தமிழ்நாடு மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.