பயணத் தடையை ஐ.நா விலக்கியதால் தலிபான் அமைச்சர் இந்தியா வருகை: பாகிஸ்தான், சீனாவுக்கு செக் வைக்கும் திட்டமா?
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது, இது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் ஆட்சியை இந்தியா இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், மனிதாபிமான உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான தொடர்புகளைத் தொடர்ந்து வருகிறது. கடைசியாக, கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் (ஐசி-814) கடத்தப்பட்டபோது, அப்போதைய தலிபான் தலைவர்களுடன் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு, 26 ஆண்டுகளாக தலிபான் அமைச்சர் யாரும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டதில்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி, வரும் 9 முதல் 16ம் தேதி வரை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் மீது ஐக்கிய நாடுகள் சபையின் பயணத் தடை அமலில் இருப்பதால், சர்வதேச பயணங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலிபான் தடைகள் குழுவிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த பயணத்திற்காக இந்தியா விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வருவதற்கு முன்பு, அவர் வரும் 6ம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் ‘மாஸ்கோ ஃபார்மெட்’ பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்குப் போட்டியாக இந்தியாவின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
பயணத்தின் போது, மனிதாபிமான உதவிகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.