தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் உயிரிழப்பு: சோதனை சாவடிகள் பறிபோனதால் பதற்றம்
காபூல்: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்னர். தாலிபான் வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் படைகளின் ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளோம். கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில் தாக்குதல்களை நிறுத்தி இருக்கிறோம் என தாலிபான் அரசு கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்தியதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சுமார் 2,600 கிலோமீட்டர் நீளமுள்ள ‘டுராண்ட் லைன்’ எல்லைப் பகுதியை தலிபான்கள் அங்கீகரிக்க மறுத்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், கடந்த வாரம் காபூல், கோஸ்ட் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தலிபான்களின் 201வது காலித் பின் வாலித் ராணுவப் படை, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நேற்று திடீர் தாக்குதலைத் தொடங்கியது.
இந்த தாக்குதலில் குறைந்தது 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மண்ட், நங்கர்ஹார், குனார் மற்றும் பாக்டியா மாகாணங்களில் உள்ள பாகிஸ்தான் எல்லைச் சோதனைச் சாவடிகளையும் ஆப்கானிஸ்தான் படைகள் கைப்பற்றின.
இந்த மோதலை உறுதி செய்த பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள், தங்கள் தரப்பிலிருந்தும் முழு பலத்துடன் பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், ‘எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை பாகிஸ்தான் மீறினால், அதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்’ என ஆப்கான் அமைச்சகம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.