சர்வதேச தரத்தில் தக் லைஃப் படம் உருவாகி உள்ளது; உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன் பேட்டி
இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தக் லைஃப் படக்குழுவினர் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர் சந்தித்து பேசினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது; தக் லைஃப் மணிரத்னத்தின் படம். தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் அளவுக்கு படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சர்வதேச தரத்தில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி உள்ளது. வெளிநாட்டினர் பாராட்டும் அளவுக்கு தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
இயக்குனர் மணிரத்னத்துடன் பணிபுரிந்தது குதூகலமாக இருந்தது. நாசருக்கு எப்படி நாயகன் படமோ அதைப்போல் எனக்கு தக் லைஃப் திரைப்படமாகும். அமெரிக்காவுக்கு இணையாக தக் லைஃப் படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். ராஜ்கமல் என்ற பெயருக்கு பின்னால் உள்ள இன்டர்நேஷனல் என்ற வார்த்தைக்கு முழுபொருளையும் மணிரத்னம் கொடுத்துள்ளார். உணவு சாப்பிடும் நேரத்தில் நாங்கள் பேசுவது கூட அரட்டையாக இருக்காது சினிமாவை பற்றிதான் இருக்கும்.
உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: கமல்ஹாசன்
நான் பார்த்த இளைஞர் மணி இன்று சினிமா ஞானியாக மாறி இருக்கிறார். எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி சொல்கிறேன். தமிழ் - கன்னடம் பிரச்சனை பற்றி பிறகு பேசலாம்; தமிழனாக அதற்கு நேரம் ஒதுக்கித் தருவது என் கடமை. நான் மேடையில் பேசும்போது உயிரே உடல் தமிழே என சொல்வதற்கான அர்த்தத்தை முழுவதுமாக உணர்கிறேன் என்றார்.